கேரம் போட்டியும் (CARROM COMPETITION) நானும்... பின்னே பாஷ்யமும்...
(ஏன் நாங்க எல்லாம் கேரம் விளையாடமாட்டோமா என்ன...?)
பல வருடங்கள் கேரம் விளையாட்டில் சாம்பியனான ஒருவரை நான் வீழ்த்திய கதை....
இது கதையல்ல... நிஜம்...
இது 2005-ஆம் வருடம் நிகழ்ந்த நிகழ்வு...
அப்பொழுது நான் என்மாஸ் (ENMAS) என்ற சென்னையில் உள்ள ஒரு பாய்லர் கம்பெனியில் பணி புரிந்துகொண்டிருந்தேன்.
கம்பெனியின் 10-அம வருட நிறைவு விழாவின் பொருட்டு பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், முன்னதாக அவற்றிற்குரிய பயிற்சி தினமும் மாலையில் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்கள்.
நான் சிறுவனாக இருந்தபொழுதிலிருந்தே "வெளையாடப் போனா அடி பட்டுக்குவோம்... அப்புறம் லீவு எல்லாம் போடணும்... ரொம்ப கஷ்டம்..." என்ற ஓர் எண்ணம் மனதில் ஆழப்பதிந்திருந்த காரணத்தால் "யாருக்கோ என்னவோ சொல்லுறாங்க" என்பது போல எதனையும் கண்டு கொள்ளாமல் நானுண்டு எனது டிராயிங் உண்டு என்று இருந்து கொண்டிருந்தேன்...
முதல் நாள் மாலை நெருங்கிய நண்பனொருவன், "வா நண்பா போயி பிராக்டீஸ் பண்ணுவோம்" என்று அழைத்தான். இல்ல நண்பா வேலை இருக்கு (!!!) என்று கூறி தவிர்த்துவிட்டேன்....
அடுத்த இரண்டு நாட்களும் இதேபோல் சென்றிட...
விதி வலியது என்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன்....
நேராக எனது சீட்டிற்கு வந்த நண்பன், "ஒனக்கு ஏதாவது வெளையாட்டு வெளையாடத் தெரியுமா தெரியாதா?" என்று முகத்திலடித்தாற்போல் கேட்க...
"இல்ல நண்பா எனக்கு இந்த கிரிக்கெட், செஸ், பாட்மிட்டன் எதுவுமே புடிக்காது....
ஒன்லி ரெஸ்லிங் (WRESTLING)..." என்று கூறி தப்பிக்கப் பார்க்க....
அதெல்லாம் முடியாது... நீ வந்தே ஆகணும் என்று கட்டாயப்படுத்தி எனை இழுத்துச் செல்ல...
விதி தொலைவில் நின்று சிரித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்...
செல்லும் வழியில், "நண்பா, பெரிய கேம் எதுவும் வேண்டாம்... வேணும்னா செஸ் விளையாடலாம்...
கொஞ்சம் பேஸிக் மட்டும் ரீகால் பண்ணி விட்டுடு... அப்புறம் பாரு... " என்று கூற
(எனது மைண்ட் வாய்ஸ்: அப்புடியே இவரு வெளையாடிடுவாராம்...)
"ஓகே ஓகே" என்று தலையாட்டியவாறு சென்றவன்...
ஒரு பெரிய போர்டைச் சுற்றி நான்கு பேர் நின்றிருக்க எனை அந்த இடத்தில் கொண்டுபோய் நிறுத்தினான்...
என்ன நண்பா...?
பரிதாபமாக நான் அவன் முகத்தைப் பார்க்க...
கவுண்டர் ஸ்டைலில்..."இதுதான் மேண்டில்" என்பது போல "இதுதான் கேரம் போர்டு" என்று கூறிவிட்டு
(அப்புடியாடா ஒன்னும் தெரியாம இருப்போம்...? கிராதகா...)
"பாஷ்யம் சார் ஒரு மேட்ச்... ஜெயக்குமார் கூட..." என்றதும்...
அவர் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தைப் பாதியிலேயே கலைத்துவிட்டு (எனக்கு வேணும்...)
புதிதாகக் காயின்களை அடுக்கினார்...
இந்த இடத்தில் பாஷ்யம் என்பவரைப் பற்றிக் கூறாக வேண்டும்...
இவர் கேரம் விளையாட்டில் புலி என்பது கடந்த இரண்டுவருடங்களில் இந்த அலுவலகத்தில் நான் சேர்ந்தது முதல் பல முறை கேள்விப்பட்டுள்ளேன்.
இதுவரை யாருமே அவரைத் தோர்க்கடித்ததில்லையாம்...
எந்த நேரம் பார்த்தாலும் அவர் விளையாடத் தொடங்கினால் அவரைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்... அவருடைய ஆட்டத்தினைக் காண என்றெல்லாம் பல விதங்களில் கேள்விப்பட்டிருந்த பாஷ்யம் அவர்களுக்கு எதிராக நானா...?
என்னால் நம்ப முடியவில்லை...
மனதில் ஒரு தன்னம்பிக்கை... "என்ன காயின சுண்டி விட்டு அந்த குழியில தள்ளனும்... அவ்வளவுதான... என்னவா இருந்தாலும் இன்னைக்கு நானா பாஷ்யமா அப்புடின்னு ஒரு கை பாத்துடவேண்டியதுதான்" என்று முழு நம்பிக்கையுடன் ஷூ, சாக்ஸ் ஏதுமணியாமல் ( கேரம் விளையாட அதெல்லாம் எதுக்கு...?) களமிறங்கினேன்...
நானும் பாஷ்யமும் எதிரெதிரில் நிற்க...
தனக்குப் பிடித்த இருவரை மற்ற இரு பக்கங்களில் நிற்க வைத்தார்...
"எத்தன பேரு வந்தா என்ன... இப்பப் பாருங்க என்னோட ஆட்டத்த..." மனதில் நினைத்துக்கொண்டே விளையாடத்தொடங்க...
ஆட்டம் தொடங்கியதும்...பாஷ்யம், "ஒன்னும் பண்ண வேண்டாம் ஜெயக்குமார், சும்மா ஸ்ட்ரைக்கர லேசா தட்டி விடு போதும் " என்றதும்...
அவர்மேல் இருந்த மரியாதையின் காரணமாக வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு (இவர் யார் என்ன கண்ட்ரோல் பண்ண... முடிஞ்சா நேர்மையா விளையாண்டு ஜெயிச்சுப் பாருங்க...) அவர் கூறியது போல கொஞ்ச நேரம் விளையாடத் தொடங்கினேன்...
பாஷ்யம் அவர்களின் விளையாட்டை க் காண கூட்டம் கூடியது...
இதுதான் சரியான நேரமென்று உடனடியாக எனது மனம் போன போக்கில் பேக் ஷாட், ஸ்ட்ரெய்ட் கட் (இதெல்லாம் இருக்கா...?) என்று விளையாட பல காயின்கள் பள்ளத்தில் விழ...ஒரே ஆரவாரம்... பலமுறை எனது ஸ்ட்ரைக்கர் பள்ளத்தில் போய் விழ ஒவ்வொரு காயினாக உள்ளே எடுத்துவைத்தார்கள்... நேரம் போகப் போக "கூல் கை" பாஷ்யம் அவர்களின் முகம் "ஆங்கிரி பேர்டாக" மாறியது... அதனை வைத்தே அவர் தோல்வியை நெருங்கி விட்டார் என்பதை உணந்தேன்...(அப்ப நாம WIN-தான்..)
ஒரு கட்டத்தில் பாஷ்யம் கோபமாக , "ஒன்னும் பண்ண வேண்டாம் ஜெயக்குமார், சும்மா ஸ்ட்ரைக்கர லேசா தட்டி விடு போதும் " என்றதும்...
நான் கண்டுகொள்ளவில்லை (யார்கிட்ட... ஹிஸ்டரி இப்ப மாறுது பாருங்க...)
அடுத்த ஒரு நிமிடத்தில் பாஷ்யம் டீம் தோற்று விட்டதாக அறிவிக்கப்பட... (Very very Important Moment in my Life)
கோவத்தில் பாஷ்யம் கையில் இருந்த காயினை போர்டின் மீது வீசி விட்டு சென்றார்...(The man with no sportsmanship...)
பக்கவாட்டில் நின்று ஆடிய இரு நபர்களும் கனிவுடன் எனது கையைப் பற்றிக் குலுக்கினர்.,..
(கேம்ல அவங்க தோத்தாலும் நமக்குக் கை குடுக்குராங்கப்பா... ரொம்ப நல்லவங்க போல...)
அனைவரிடமும் பாராட்டினைப் பெற்றுக்கொள்ள நினைத்தால்... அனைவரும் மற்ற இருவருக்குமே கை கொடுத்து வாழ்த்தினர்...
ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என மனம் உணர்த்த... அங்கிருந்து நழுவி நண்பனிருக்குமிடம் செல்ல...
அவன், "என்ன நண்பா இப்புடி பண்ணீட்ட... ஒனக்கு வெளையாடத் தெரியாதுன்னுதான பாஷ்யம் சார் டீம்ல நிக்கவெச்சு ஆடச் சொன்னேன்... இப்புடி அவர போயி தோக்கடிச்சுட்டியே.."எனவும்...
"ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா...?" என்று வேகத்துடன் கேட்க....
"லூசுப் பயலே அவரு ஒன்னோட டீம் தாண்டா... ரெண்டுபேரும்தான் தோத்துப் போயிட்டீங்க..." என்று தலையில் அடித்துக் கொண்டான்.
"அட படுபாவி... கேரம் வெளையாடச் சொன்னியே... நமக்கு எதுதாப்புல நிக்கிறவரு எதிரி இல்ல... நம்ம டீம்தான்னு ஆரம்பத்துலையே சொல்லியிருக்கலாம்ல..."
(வெளையாடுறப்ப போர்டுல வச்ச காயினெல்லாம் அவரு ஜெயிச்சதா...?)
இந்நிகழ்ச்சி நடந்த பிறகு ஒரு வாரம் வரை பாஷ்யம் அவர்களின் கண்ணில் நான் படவே இல்லை....
அப்புறம் அடி விழுந்தா யாரு வாங்குவா...?
இதுக்கு தான் ஆரம்பத்துலையே சொன்னேன்...
"வெளையாடப் போனா அடி பட்டுக்குவோம்... அப்புறம் லீவு எல்லாம் போடணும்... ரொம்ப கஷ்டம்..." அப்புடின்னு...
நாம சொல்லுறத யாரு கேக்குறாங்க...
என்றும் அன்புடன்,
சு. ஜெயக்குமார்

No comments:
Post a Comment