Monday, 26 November 2012

கேரம் போட்டியும் (CARROM COMPETITION) நானும்... பின்னே பாஷ்யமும்... (ஏன் நாங்க எல்லாம் கேரம் விளையாடமாட்டோமா என்ன...?)


கேரம் போட்டியும் (CARROM COMPETITION) நானும்... பின்னே பாஷ்யமும்...

(ஏன் நாங்க எல்லாம் கேரம் விளையாடமாட்டோமா என்ன...?)



பல வருடங்கள் கேரம் விளையாட்டில் சாம்பியனான ஒருவரை நான் வீழ்த்திய கதை....

இது கதையல்ல... நிஜம்...

காட்சி -1:

இது 2005-ஆம் வருடம் நிகழ்ந்த நிகழ்வு...

அப்பொழுது நான் என்மாஸ் (ENMAS) என்ற சென்னையில் உள்ள ஒரு பாய்லர் கம்பெனியில் பணி புரிந்துகொண்டிருந்தேன்.

கம்பெனியின் 10-அம வருட நிறைவு விழாவின் பொருட்டு பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், முன்னதாக அவற்றிற்குரிய பயிற்சி தினமும் மாலையில் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்கள்.

நான் சிறுவனாக இருந்தபொழுதிலிருந்தே "வெளையாடப் போனா அடி பட்டுக்குவோம்... அப்புறம் லீவு எல்லாம் போடணும்... ரொம்ப கஷ்டம்..." என்ற ஓர் எண்ணம் மனதில் ஆழப்பதிந்திருந்த காரணத்தால் "யாருக்கோ என்னவோ சொல்லுறாங்க" என்பது போல எதனையும் கண்டு கொள்ளாமல் நானுண்டு எனது டிராயிங் உண்டு என்று இருந்து கொண்டிருந்தேன்...

முதல் நாள் மாலை நெருங்கிய நண்பனொருவன், "வா நண்பா போயி பிராக்டீஸ் பண்ணுவோம்" என்று அழைத்தான். இல்ல நண்பா வேலை இருக்கு (!!!) என்று கூறி தவிர்த்துவிட்டேன்....
அடுத்த இரண்டு நாட்களும் இதேபோல் சென்றிட...

விதி வலியது என்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன்....

நேராக எனது சீட்டிற்கு வந்த நண்பன், "ஒனக்கு ஏதாவது வெளையாட்டு வெளையாடத் தெரியுமா தெரியாதா?" என்று முகத்திலடித்தாற்போல் கேட்க...

"இல்ல நண்பா எனக்கு இந்த கிரிக்கெட், செஸ், பாட்மிட்டன் எதுவுமே புடிக்காது....
ஒன்லி ரெஸ்லிங் (WRESTLING)..." என்று கூறி தப்பிக்கப் பார்க்க....

அதெல்லாம் முடியாது... நீ வந்தே ஆகணும் என்று கட்டாயப்படுத்தி எனை இழுத்துச் செல்ல...

விதி தொலைவில் நின்று சிரித்துக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்...

காட்சி -2:

செல்லும் வழியில், "நண்பா, பெரிய கேம் எதுவும் வேண்டாம்... வேணும்னா செஸ் விளையாடலாம்...
கொஞ்சம் பேஸிக்  மட்டும் ரீகால் பண்ணி விட்டுடு... அப்புறம் பாரு... " என்று கூற

(எனது மைண்ட் வாய்ஸ்: அப்புடியே இவரு வெளையாடிடுவாராம்...)
 "ஓகே ஓகே" என்று தலையாட்டியவாறு சென்றவன்...
ஒரு பெரிய போர்டைச் சுற்றி நான்கு பேர் நின்றிருக்க எனை அந்த இடத்தில் கொண்டுபோய் நிறுத்தினான்...

என்ன நண்பா...?
பரிதாபமாக நான் அவன் முகத்தைப் பார்க்க...
கவுண்டர் ஸ்டைலில்..."இதுதான் மேண்டில்" என்பது போல "இதுதான் கேரம் போர்டு" என்று கூறிவிட்டு
(அப்புடியாடா ஒன்னும் தெரியாம இருப்போம்...? கிராதகா...)

"பாஷ்யம் சார் ஒரு மேட்ச்... ஜெயக்குமார் கூட..." என்றதும்...
அவர் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தைப் பாதியிலேயே கலைத்துவிட்டு (எனக்கு வேணும்...)
புதிதாகக்  காயின்களை அடுக்கினார்...

இந்த இடத்தில் பாஷ்யம் என்பவரைப் பற்றிக் கூறாக வேண்டும்...

இவர் கேரம் விளையாட்டில் புலி என்பது கடந்த இரண்டுவருடங்களில் இந்த அலுவலகத்தில் நான் சேர்ந்தது முதல் பல முறை கேள்விப்பட்டுள்ளேன்.

இதுவரை யாருமே அவரைத் தோர்க்கடித்ததில்லையாம்...

எந்த நேரம் பார்த்தாலும் அவர் விளையாடத் தொடங்கினால் அவரைச்சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்... அவருடைய ஆட்டத்தினைக் காண என்றெல்லாம் பல விதங்களில் கேள்விப்பட்டிருந்த  பாஷ்யம் அவர்களுக்கு  எதிராக நானா...?

என்னால் நம்ப முடியவில்லை...

மனதில் ஒரு தன்னம்பிக்கை... "என்ன காயின சுண்டி விட்டு அந்த குழியில தள்ளனும்... அவ்வளவுதான... என்னவா இருந்தாலும் இன்னைக்கு நானா பாஷ்யமா அப்புடின்னு ஒரு கை பாத்துடவேண்டியதுதான்"  என்று  முழு நம்பிக்கையுடன் ஷூ, சாக்ஸ் ஏதுமணியாமல் ( கேரம் விளையாட அதெல்லாம் எதுக்கு...?) களமிறங்கினேன்...

காட்சி -3: கிளைமாக்ஸ் :

நானும் பாஷ்யமும் எதிரெதிரில் நிற்க...
தனக்குப் பிடித்த இருவரை மற்ற இரு பக்கங்களில் நிற்க வைத்தார்...

"எத்தன பேரு வந்தா என்ன... இப்பப் பாருங்க என்னோட ஆட்டத்த..." மனதில் நினைத்துக்கொண்டே விளையாடத்தொடங்க...


ஆட்டம் தொடங்கியதும்...பாஷ்யம், "ஒன்னும் பண்ண வேண்டாம் ஜெயக்குமார், சும்மா ஸ்ட்ரைக்கர லேசா தட்டி விடு போதும் " என்றதும்...

அவர்மேல் இருந்த மரியாதையின் காரணமாக வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு (இவர் யார் என்ன கண்ட்ரோல் பண்ண... முடிஞ்சா நேர்மையா விளையாண்டு ஜெயிச்சுப் பாருங்க...) அவர் கூறியது போல கொஞ்ச நேரம் விளையாடத் தொடங்கினேன்...

சிறிது நேரத்தில்... 
பாஷ்யம் அவர்களின் விளையாட்டை க் காண கூட்டம் கூடியது...

இதுதான் சரியான நேரமென்று உடனடியாக எனது மனம் போன போக்கில் பேக் ஷாட், ஸ்ட்ரெய்ட்  கட் (இதெல்லாம் இருக்கா...?) என்று விளையாட பல காயின்கள் பள்ளத்தில் விழ...ஒரே ஆரவாரம்... பலமுறை எனது ஸ்ட்ரைக்கர் பள்ளத்தில் போய் விழ ஒவ்வொரு காயினாக உள்ளே எடுத்துவைத்தார்கள்... நேரம் போகப் போக "கூல்  கை"  பாஷ்யம் அவர்களின் முகம் "ஆங்கிரி பேர்டாக" மாறியது... அதனை வைத்தே அவர் தோல்வியை நெருங்கி விட்டார் என்பதை உணந்தேன்...(அப்ப நாம WIN-தான்..) 

ஒரு கட்டத்தில் பாஷ்யம் கோபமாக , "ஒன்னும் பண்ண வேண்டாம் ஜெயக்குமார், சும்மா ஸ்ட்ரைக்கர லேசா தட்டி விடு போதும் " என்றதும்...

நான் கண்டுகொள்ளவில்லை (யார்கிட்ட... ஹிஸ்டரி இப்ப மாறுது பாருங்க...)

அடுத்த ஒரு நிமிடத்தில் பாஷ்யம் டீம் தோற்று விட்டதாக அறிவிக்கப்பட... (Very very Important Moment in my Life)
கோவத்தில் பாஷ்யம் கையில் இருந்த காயினை போர்டின் மீது வீசி விட்டு சென்றார்...(The man with no sportsmanship...)


பக்கவாட்டில் நின்று ஆடிய இரு நபர்களும் கனிவுடன் எனது கையைப் பற்றிக் குலுக்கினர்.,..
(கேம்ல அவங்க தோத்தாலும் நமக்குக் கை குடுக்குராங்கப்பா... ரொம்ப நல்லவங்க போல...)

அனைவரிடமும் பாராட்டினைப் பெற்றுக்கொள்ள நினைத்தால்... அனைவரும் மற்ற இருவருக்குமே கை கொடுத்து வாழ்த்தினர்...

ஏதோ தவறு  நிகழ்ந்துள்ளது என மனம் உணர்த்த... அங்கிருந்து நழுவி நண்பனிருக்குமிடம் செல்ல...

அவன், "என்ன நண்பா இப்புடி பண்ணீட்ட... ஒனக்கு வெளையாடத் தெரியாதுன்னுதான பாஷ்யம் சார் டீம்ல நிக்கவெச்சு ஆடச் சொன்னேன்... இப்புடி அவர போயி தோக்கடிச்சுட்டியே.."எனவும்...
"ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா...?" என்று வேகத்துடன் கேட்க....

"லூசுப் பயலே அவரு ஒன்னோட டீம் தாண்டா... ரெண்டுபேரும்தான் தோத்துப் போயிட்டீங்க..." என்று தலையில் அடித்துக் கொண்டான்.

"அட படுபாவி... கேரம் வெளையாடச் சொன்னியே... நமக்கு எதுதாப்புல நிக்கிறவரு எதிரி இல்ல... நம்ம டீம்தான்னு ஆரம்பத்துலையே சொல்லியிருக்கலாம்ல..." 
(வெளையாடுறப்ப  போர்டுல வச்ச காயினெல்லாம் அவரு ஜெயிச்சதா...?)

இந்நிகழ்ச்சி நடந்த பிறகு ஒரு வாரம் வரை பாஷ்யம் அவர்களின் கண்ணில் நான் படவே இல்லை....

அப்புறம் அடி விழுந்தா யாரு வாங்குவா...?

இதுக்கு தான் ஆரம்பத்துலையே சொன்னேன்...

"வெளையாடப் போனா அடி பட்டுக்குவோம்... அப்புறம் லீவு எல்லாம் போடணும்... ரொம்ப கஷ்டம்..." அப்புடின்னு...

நாம சொல்லுறத யாரு கேக்குறாங்க...

என்றும் அன்புடன்,
சு. ஜெயக்குமார் 

Sunday, 25 November 2012


அங்கிள்... அங்கிள்.... எங்கு சென்றாலும் துரத்தும் வார்த்தை....

(அதுனால என்ன இருந்துட்டு போகட்டுமே...)




2008-ஆம் வருடத்தில் ஒரு நாள்...
அப்பொழுது புனே-வில் வேலை செய்து கொண்டிருந்தேன்...


எனது அலுவலகம் சென்னையில்தான்....

ஆனால் மிஸ்டர் சிவா...அமெரிக்காவே ஒங்களத்தான் நம்பியிருக்கு.... என்று தமிழ்ப்படத்தில் கூறுவது போல....

நீங்க வந்தாதான் இந்த ப்ராஜெக்ட் செய்ய முடியும் (!!!) அப்புடின்னு  ஹெட் ஆஃ பீசுல இருந்து சொன்னதும்...

நான் (அப்பொழுது வயது 27), மற்றொரு நண்பர் பகவதி (அப்பொழுது வயது 29) , எங்களுடைய டைரக்ட் பாஸ் செந்தில் குமார் (அப்பொழுது வயது 36) மற்றும் எங்களுடைய மேனேஜர் (அப்பொழுது வயது 38) ஆகிய ஒரு குழுவாக புனே சென்று ஒரு ஆறு மாத காலங்கள் பாவ் பாஜியும்... பாலக் பனீருமாகத் தின்று வந்தோம்.... 

நான் ஒரு இராக்கோழி மட்டுமல்ல அதிகாலையில் துயிலெழுபவனும் கூட...

எனவே காலையில் எழுந்து டீவியில் மூழ்கி விடாமல்... (டீவி பார்க்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டன...)
காலையில் நடக்கலாமே என்று முடிவு செய்தேன்...

தனியா நடக்க முடியாதே... ஹிந்தி, மராத்தி தெரியாது...
நாய் தொரத்துனா கூட யாரையும் ஹெல்ப் கேக்க முடியாது.... 
என்ன பண்ணலாமென்று நன்கு யோசித்து...

சற்றே சற்று டயாபட்டீஸ் ஆரம்ப நிலையிலிருந்த எங்கள் மேனேஜரை அவரது அனுமதி இல்லாமலேயே...
அதிகாலையில் (5 மணிக்கு) எழுப்பி... புனே குளிரில் சொட்டர் இல்லாமல் (To enjoy the real climate !!!)   வாக்கிங் செல்ல முடிவெடுத்து... 
செயல் படுத்தவும் தொடங்கினேன்...

5 மணிக்கு அவரை எழுப்பி தர தர வென்று இழுத்துக்கொண்டு செல்கையில் எனக்கே பாவமாகதான் இருந்தது...
அதுக்காக விட்டுடலாமா... என்ன...?

முதலிரண்டு நாட்கள் கஷ்டமாக இருந்த அவருக்கும் அந்த வாக்கிங் பிடித்துவிட....
தினமும் ஒரு புது வழியில்... புதுப் புது திசையில் இருவரும் நடந்தோம்...

எனவே அங்கே பல இடங்கள் அத்துபடியாகிவிட்டன...
(ஆனா ஹிந்தியும் மராத்தியும் இன்னைக்கு வரைக்கும் தெரியாது...)


இப்பொழுது சம்பவத்திற்கு வருகிறேன்....

புனேயில் BHEL  சௌக் என்றொரு இடமுண்டு...
நாங்கள் பணிபுரிந்தது THERMAX என்ற பாய்லர் கம்பெனி... எனவே அது இருக்குமிடத்திற்கு தெரமாக்ஸ்சௌக் என்று பெயர்...
அது போல BHEL கம்பெனி இங்க எங்கயோ இருக்கு சார் என்று நான் கூறிட... அவர் சிரித்து...
இங்க பேல் பூரி கடைங்க அதிகமா இருக்குற இடம் அதுனால இந்த எடத்துக்கு பேல் சௌக் அப்புடின்னு பேரு என்று கூறியதும் (I have got a Bulb) நடந்த இடம்....

ஒரு இனிய இரவு நேரம் (7.30 PM)... 
நாங்கள் நால்வரும் சாப்பிட்டுவிட்டு பேல் சௌக் வழியாக நடந்துகொண்டிருக்கையில் 

ஸ்கூட்டி ஒன்று எங்களருகில் வந்து நின்றது....

அதை ஓட்டி வந்த பதினைந்து பதினாறு வயதுள்ள ஒரு பள்ளி மாணவி,"அங்கிள்... MME ஸ்கூல் எங்கே இருக்கிறது"என்று மராத்தியில் கேட்க (கொஞ்சம் கொஞ்சம் புரியும்)...

மிக விளக்கமாக ஆங்கிலத்தில் அந்த இடத்திற்குச் செல்லும் வழியைக் கூறிக்கொண்டே பார்க்கிறேன்...

எங்கள் மேனேஜரும்... டைரக்ட் பாஸும் சடாரென ஏறக்குறைய ஓடிவிட்டார்கள்...
நண்பர் பகவதியும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டிருந்தார்...

அப்பொழுதுதான் உணர்ந்தேன் அப்பெண் "அங்கிள்" என்று அழைத்ததினை...

அதன் பிறகு பலமுறை வெவேறு இடங்களில் சிறுவர்களும் சிறுமிகளும் இதே போல் அழைத்து ஏதேதோ கேட்ட பொழுதும் நின்று நிதானமாக அவர்களது கேள்விக்கு பதில் கூறினேன்...

"இத்தன பேரு இருக்குறோம்... ஆனா எல்லா எடத்துலயும் ஒங்க கிட்ட மட்டுமே எல்லாரும் அட்ரஸ் கேக்குறாங்க...
ஒருவேள ஒங்கள மராத்திக்காரர்னு நெனைச்சுட்டாங்க போல" என்று அனைவரும் கூறினார்கள்...

எனக்கு ஏன் அச்சொல்  வித்தியாசமாகத் தோன்றவில்லை...

காரணம்...

என்னுடைய முதல் அக்கா என்னைவிட 12 வயது பெரியவர்...
அவருக்கு 20 வயதிற்குள் திருமணம் நிகழ்ந்துவிட்டது...
எனக்கு புனேவில் இச்சம்பவம் நிகழ்ந்தபொழுது எனது அக்கா மகனுக்கு 16 வயது....

பிறகெப்படி எனக்கு வித்தியாசமாகத் தோன்றும்...

அங்கிள்ன்னுதான கூப்புடுறாங்க... 
அதுனால என்ன இருந்துட்டு போகட்டுமே...

நம்ம ஊருல காந்தித் தாத்தாவைவிட நேரு மாமாவதானே கொழந்தைங்களுக்கு ரொம்ப புடிக்கும்....

ஆனால் என்னுடன் வருபவர்கள் பாடுதான் பாவம்...

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்

Saturday, 10 November 2012

குருக்கள் தாத்தா


குருக்கள் தாத்தா



எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்றூர் ஒன்றிலுள்ள குருக்கள் குடும்பமொன்று (சிவன் கோவில் பூஜை செய்பவர்கள்) எங்களுக்கு மிகவும் பழக்கம்.
அவர்கள் வீட்டிலுள்ள அனைவரும் எங்களுடன் உறவினர்கள் போல் பழகுவர்.

குருக்கள் தாத்தாவிற்கு அப்பொழுது எழுபத்தைந்து வயதிற்கு மேல் இருக்குமென்று நினைவு...

ஒரு நாள் மாலை அம்மாவும் அப்பாவும் "குருக்கள் மாமாவுக்கு ஒடம்பு சரியில்லையாம், பாலு டாக்டர்கிட்டதான் சேத்துருக்காம். போய் பாத்துட்டு வரணும்" என்று பேசிக்கொண்டிருந்தனர்.

அன்று மாலை அம்மாவுடன் மருத்துவமனை சென்றிருந்தேன்.

ஒரு சிறிய வார்டில் வரிசையாக கட்டில்கள் வரிசையாக போடப்பட்டு இருக்க, ஒவ்வொரு படுக்கைக்கும் இடையில் ஒரு போர்வை மறைவை ஏற்படுத்தி இருந்தது...

பாட்டியும் தாத்தாவின் மகனும் சோகமுடன் அவர் அருகில் அமர்ந்து இருந்தனர்.

தாத்தாவின் முகமும், தோல் சுருக்கங்களும் முதுமையைக் காட்டின...

சுற்றிலும் மருத்துவமனை நெடி பரவி இருந்ததது.

கண்கள் மூடி படுத்திருந்தவருக்கு இடது கையில் சொட்டு சொட்டாக ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருத்தது.

அம்மாவை பார்த்ததும் அந்த பாட்டி தாத்தாவிடம் குனிந்து "சரோஜா வந்துருக்கா" என்று சத்தமாகக் கூறிட (கண்கள் தெரியாது. காதுகள் சத்தமாகப் பேசினால் கேட்கும்)அவர் முகத்தில் குழந்தை போல் ஒரு புன்முறுவல்...

சிறிது நேரத்தில் அவரிடமிருந்து விக்கல் எழவும்...

அம்மா, "மாமாவுக்கு விக்கறது பாருங்கோ" என்று கூறிட தண்ணீர் கொடுத்தார்கள்...

விக்கலுக்கு இடையில் அவர் ஏதோ சொல்ல முயற்சிக்க...
வார்த்தைகள் வெளிவரவில்லை....

ஒருவழியாக விக்கல் நின்றதும் மிகவும் பிரயத்தனப்பட்டு தான் சொல்ல வந்ததை வெளியிட்டார்...

"விக்கறது... யாரு வாங்கப்போறா..."

அனைவரும் குபீரென சிரிக்க சோக சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது...

சிறிது நேரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு அவர்கள் சென்றுவிட...
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் வீட்டில் தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார் என தகவல் வந்தது...

What a sense of humour….

நல்ல தாத்தா…

புலம்பல்...




என்ன குற்றம் செய்தேன் நான்....?

கொதிக்கும் எண்ணெயில் முக்கி எடுத்தது போதாதென்று..... 

தூக்கில் வேறு போடுகிறீர்கள்....

- முறுக்கு.

ஒரு சிறிய அறிமுகம் (A Small Introduction)




பல வருடங்களாக ஏதேனும் எழுத வேண்டுமேன்று ஆசை...

இதற்காக ஐந்து வருடங்களுக்கு முன்னர் நண்பர் ராஜேஷிடம் (http://www.facebook.com/jkmrajesh?fref=ts) , "பாஸ் ஒரு கருப்பு இங்க் ஊத்துர மாதிரி ஒரு பேனா வாங்கிக் குடுங்க... அப்புறம் பாருங்க... எப்புடி எழுதுறேன்னு..." 

என்று சவடால் பேச்சு எல்லாம் பேசிவிட்டேன்...

ஆனால் இன்று வரை அவரும் பேனா வாங்கிக் கொடுக்கவில்லை... 

நானும் உருப்படியாக எதுவும் எழுதவில்லை...

எனவே இன்று நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்...

இதில் இடம்பெறும் கதா பாத்திரங்கள் யாவும் கற்பனை அல்ல...

அவர்கள் (அவைகளும்) உங்களிடையே வலம் வரவோ...வந்திருக்கவோ கூடும்...

கொஞ்சம் கொஞ்சம் உண்மையும் உண்டு...

எனக்கு லைக், கமென்ட் இதன் மீது எல்லாம் ஆசை இல்லை...

ஆனால் எனது எழுத்துத் திறனை மேம்படுத்திக் கொள்ள நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் தேவைபடுகின்றன...

தயங்காமல் ஆதரவளிக்கவும்...
(நல்லா மாட்டிக்கிட்டீங்களா...?)

ஓவர் பில்ட் அப் கொடுக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்..

நன்றி...

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்